திமுக அரசை அகற்ற நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார்- திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி…!
கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான் நான்காண்டு காலம் சிறந்த ஆட்சியை வழங்கியுள்ளேன். வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது. புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக சேலம் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. தற்போது விவசாய பணிகள் மேற்கொள்ளும் காலம். ஆனாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்கவில்லை. தேர்தல் காலத்தில் அறிவித்த திட்டங்களில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, உயர் கல்வித் துறை போன்ற துறைகளில் இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றது. சட்டம் -ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்கியது. திமுக அரசை அகற்ற நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் போதைப்பொரு விற்பனை தாராளமாக உள்ளது. உதயநிதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி சிறந்த அமைச்சராக வந்துள்ளார் என்றால் மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவில்லையா? . கலைஞரின் அடையாளத்தில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதி குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் கிட்டும்.
ஆனால் அதிமுக அதுபோன்று இல்லாமல் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிட்டும். திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. பொதுமக்கள் மீது கடன் சுமையை ஏற்றியது தான் திமுகவின் சாதனை. கருணாநிதி மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?.
இவ்வாறு அவர் கூறினார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
Comments are closed.