காதல் தகராறில் இருதரப்பு பயங்கர மோதல் – கத்திக்குத்தில் வாலிபர் பலி, பதற்றம்-போலீசார் குவிப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர்சோலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் பொன்னி டெல்டா பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் ( 24). திருவளர்சோலையில் பழக்கடை வைத்துள்ளார். விக்னேஷின் உறவினர் பெண்ணை நாகேந்திரன் காதலிப்பது தொடர்பாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு நாகேந்திரன், லால்குடி அருகே சங்கேந்தியை சேர்ந்த அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகிய இருவரும் சேர்ந்து விக்னேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதுதொடர்பாக, ஜீவானந்தத்தின் ஆதரவாளர்களான திருவளர்சோலை கீழத்தெருவை சேர்ந்த ஜான் மகன் நெப்போலியன் (29), காமராஜ் மகன் கதிரவன் (34), சேட்டு மகன் சங்கர் குரு (35), ரமேஷ் மகன் கமலேஷ் (18) உள்ளிட்ட சிலர் விக்னேஷ் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறு செய்துள்ளனர்.
அதையடுத்து விக்னேஷ் தரப்பினரும் அங்கு குவிந்தனர். அங்கு, இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டை, கல், கத்தி என கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், நாகேந்திரன், ஜீவானந்தம், நெப்போலியன், கதிரவன், சங்கர் குரு, கமலேஷ் ஆகிய 6 பேருக்கும் கத்திக்குத்து உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இவர்களில் நெப்போலியன் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கத்திக்குத்துப்பட்ட கதிரவன் உள்ளிட்டோர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் குவிப்பு
இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து, விக்னேஷ் எசனகோரையை சேர்ந்த மனோஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோட்டை காவல் நிலையத்தில், விக்னேஷ் உறவினர்கள் உட்பட, 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இருதரப்பு மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், திருவளர்சோலை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
இதற்கிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பட்டியலின மக்கள் இன்று காலை திருவானைக்காவல் கல்லணை சாலை, திருவளர்ச்சோலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் விவேகானந்தன் சுக்லா, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி, தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தால் திருவானைக்காவல்- கல்லணை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தின் புறநகர் பகுதியில் திருவளர்ச் சோலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி மோதல்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ஸ்ரீரங்கத்தில் இருந்துதான் போலீசார் வர வேண்டி இருக்கிறது. அதற்குள், நேற்று நடந்த கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. எனவே, திருவளர்சோலையில் நிரந்தரமாக ஒரு புறக்காவல் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Comments are closed.