Rock Fort Times
Online News

காக்கிச் சட்டையிலும் ஈரம் உண்டு: தனக்கு மிரட்டல் விடுத்த சிறுவனை அழைத்து அறிவுரை கூறிய திருச்சி எஸ்.பி.வருண்குமார்…! ( வீடியோ இணைப்பு)

அதிரடிக்கு பெயர் பெற்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சில ரவுடிகளின் உறவினர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கிரிமினல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், சீமான் மற்றும்  கட்சியின்  பொறுப்பாளர்கள் இருவர் மீது, ரூ.2 கோடி மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார்.  அவருக்கு மிரட்டல் விடுத்த 51 பேரில்  15 வயது சிறுவனும் அடக்கம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட சிறுவன் மற்றும் அவனது தாய் இருவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு பெண் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த மாணவன் பள்ளி இறுதி ஆண்டு படித்து வருவதும், வகுப்பிலேயே முதல் மாணவன் என்பதும்,
ஐஏஎஸ் படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவன் என்பது தெரிய வந்தது. இதனை அறிந்த  எஸ்.பி வருண்குமார், அந்த மாணவனை அழைத்து அறிவுரை கூறினார்.
நல்ல புத்தி,  நல்ல எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவதூறு, தகாத வார்த்தை பேசுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறி வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தார். அச்சிறுவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருந்தாலும், மாணவனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தது பெற்றோர் தரப்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக காவல் துறையினர் என்றாலே கடுமையாக நடந்து கொள்வார்கள் என்ற அவச்சொல் உள்ளது. அதனை திருச்சி மாவட்ட காவல் எஸ்பி உடைத்து காக்கி சட்டையிலும் ஈரம் உண்டு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்