கத்தியால் குத்தி பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருச்சியில் மளிகைக் கடையில் இருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி நகைப்பறிக்க முயன்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று ( புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. திருச்சி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்சபரிமுத்து – எழிலரசி தம்பதியர். இவர்கள் திருச்சி காட்டூர் அம்மன் நகர் ஐந்தாவது தெருவில் மாதா மளிகை ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று மாலை 4 மணியளவில் எழிலரசி மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது கடையருகில் ஆள்நடமாட்டமில்லை. இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர், பொருள்கள் வாங்குவதுபோல மளிகை கடைக்கு வந்துள்ளார். எழிலரசி பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்த எழிலரசி சங்கிலியை இறுகப் பற்றிக்கொண்டார். இதனால் அந்த நபர் வைத்திருந்த கத்தியால் எழிலரசியின் கழுத்து, முகம், கைகள் போன்ற இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவருவதைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் எழிலரசியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.விசாரடையில் , வடக்கு காட்டூர் பாரதிதாசன் 2 ஆவது தெருவைச் சேர்ந்த த. பிரான்சிஸ் (42) என்பவர் இச்செயலில் ஈடுபட்டதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், பிரான்ஸிஸ்க்கு கொலை முயற்சி வழக்கில் 7ஆண்டுகள் சிறை தண்டனையும், நகைப்பறிக்க முயற்சித்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் அபராதமாக ரூ.5000 செலுத்த வேண்டும். அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மீனாசந்திரன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட எழிலரசிக்கு அரசு ரூ. 25,000 நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜரானார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.