‘ஜெம்’ வீரமணி வழக்கு: திமுக மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருகிறது… மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
‘ஜெம்’ கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இவ்வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு வீரமணியிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பெரும் தொகை பேரம் பேசி பெற்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர். இதனை திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் எஸ் ரகுபதி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மறுத்தனர். இந்த வழக்கை தற்போதைய த.வெ.க.அரசு முறையாக விசாரணை நடத்தி வருகிறது. முதல்வர் விஜயின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் அரசு விட்டு வைக்க கூடாது, அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
மு.க.ஸ்டாலின் அறிக்கை,
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது;
“சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம். ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை. தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பு பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை. எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.