நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தான் வகித்து வரும் மத்திய கல்வி அமைச்சர் பதவியை இன்று(25-07-2026) ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நம் அனைவரின்
தார்மீக கடமையாக இருந்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்துக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு திறமையான மாணவரின் எதிர்காலமும் தேர்வு மாஃபியாவால் பாதிக்கப்படக் கூடாது, எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.`இளைஞர்களின் ஆற்றல், குழப்பம் என்ற சதிவலையில் சிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜந்தர் மந்தர் பகுதியிலும் தேசம் முழுவதும் நிலவும் சூழலை தேசவிரோத சக்திகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாட்டின் ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். இந்தியாவின் எந்தவொரு மாணவரின் எதிர்காலமும் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.