திருச்சி டி.ஐ.ஜி.வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்…!
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்வதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4-ல் நடைபெற்று வருகிறது. வருண்குமார் தரப்பில் ஏற்கனவே அவருடைய வாதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று(21-05-2025) சீமான் தரப்பில் அவருடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிபதி விஜயா தெரிவித்து இருந்தார். அதன்படி, சீமான் தரப்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் சங்கர், நீதிபதி முன்பு தனது வாதத்தை எடுத்துரைத்தார். சென்னை, எழும்பூரில் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலே சீமான், வருண்குமாரை பற்றி பேசினார். எழும்பூரில் பேசியதற்கு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல. சம்மந்தப்பட்டவர் எங்கு பேசினாரோ அந்த நீதிமன்ற வரம்புக்குள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், டிஐஜி வருண்குமார் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறியுள்ளார். 2015 ம் ஆண்டு அவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் 20 நாட்கள் சிறையில் இருந்தவர். அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று சமாதானம் பேசி முடித்தவர் வருண்குமார். எனவே, இந்த வழக்கு முழுக்க முழுக்க சீமான் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும், வருண்குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வழக்கை பதிவு செய்துள்ளார். ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதுகுறித்து டிஐஜி வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், சீமான் பேசியது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என கூறுவது தவறு. அவதூறு வழக்கை எங்கு வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என கூறினார்.
Comments are closed.