பதவிகாலம் முடிந்த பிறகும் நாற்காலியை விட்டு நகர மறுக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் !- திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் நடவடிக்கை எடுப்பாரா ?
தமிழகத்தில் உள்ள ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக 9 மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019-ம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற 9 மாவட்டங்களுக்கு 2021-ல் நடைபெற்றது. இந்தநிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், அந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 404 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவர்களது பதவி காலம் முடிவடைந்த நிலையில், சில ஊராட்சி மன்ற தலைவர்களை தவிர்த்து பெரும்பாலான ஊராட்சி மன்ற தலைவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பழைய நினைப்பிலேயே தினம், தினம் வந்து தலைவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அங்குள்ள ஊழியர்களை மிரட்டி அதிகார துஷ் பிரயோகம் செய்கின்றனர். இதனால், அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். தனி அதிகாரிகள் ஏதாவது பேச முற்பட்டால் அவர்களை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மிரட்டுகின்றனர். எக்ஸ் ஊராட்சி மன்ற தலைவர்களின் தலையீட்டால் கிராம பகுதிகளில் பல பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. பதவி காலம் முடிந்த பிறகும் பல பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது பதவியை “மிஸ் யூஸ்” செய்து நிறைய காரியங்களை சாதித்துக் கொண்டு வருகிறார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதவி காலம் முடிந்த ஒருசில பஞ்சாயத்து தலைவர்கள் மட்டுமே டீசன்டாக ஒதுங்கிக் கொண்டுள்ளனர். ஆகவே, இது விஷயத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உடனடியாக தலையிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.