மிகவும் மோசமாக நடத்தப்பட்டதே சாந்தன் உயிரிழப்புக்கு காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்
32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டுக்கு அனுப்பும்வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு முகாமில் மனிதத் தன்மையற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணமடைந்தார். மேலும், சிறப்பு முகாமில் அவர்கள் சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, மூச்சு முட்ட தனிமைச் சிறையினில் அடைக்கப்படுவோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இவர்கள் அனைவரும் தவித்து வந்துள்ளனர். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டுக்குச் செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளிநாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர்.ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக, விடுதலையானவர்கள் தங்களை இலங்கை துணைத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லும்படியும், முகாமில் மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஏப்ரல் 2010ம் ஆண்டு பிரபாகரனின் வயதான தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக முதலில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதேபோன்று இன்று, விடுதலை பெற்ற சாந்தனை காலத்தே வெளிநாடு செல்ல மத்திய அரசுடன் பேசி, உரிய அனுமதி வாங்கித் தராத காரணத்தால், இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ முடியாமல் மரணமடைந்துள்ளதற்கு இந்த அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும். இனியாவது, மீதமுள்ள 3 பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார், உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.