மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 50 சதவீத பயனாளிகள் நீக்கமா?- எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த தமிழக அரசு!
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையாக, தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும், மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகையை
ரூ.2500 ஆக உயர்த்துவோம் என்று விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.
தமிழ்நாடு அரசு விளக்கம் :
இதுகுறித்த தகவல்கள் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “மகளிர் உரிமைத் தொகை, தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும், மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான தொகை, 14ம் தேதி, ஒரு கோடியே 29 லட்சத்து 97,568 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, 17 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, பல்வேறு அரசு துறைகளின் தரவுகளுடன், பயனாளிகளின் விபரங்கள் சரி பார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணி நடக்கிறது. இது திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே நடந்து வருகிறது. அந்த வகையில் பயனாளிகளில் யாரேனும் இறந்தால், திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெற தகுதியவற்றவர்களாக மாறி இருந்தால், அல்லது தாங்களாகவே திட்டத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தால், அந்த விபரங்களின் அடிப்படையில், பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு மாதமும், உரிய முறையில் புதுப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.