Rock Fort Times
Online News

தீபாவளி முடிந்தும் கை வந்து சேராத அகவிலைப்படி… * கருணை காட்டுவாரா திருச்சி மாநகராட்சி கமிஷனர்?

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்தார். அதன்படி , ஏற்கெனவே 60 % அகவிலைப்படி பெற்றவர்கள், முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து 63 % டி.ஏ அலவன்ஸ் பெற்று வருகின்றனர். ஆனால், திருச்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் சிலரிடம் நாம் பேசினோம்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது.,

“அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஊதியமே அகவிலைப்படி. பொருளாதார நிலைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட சதவிகிதத்தை உயர்த்தி வழங்குகின்றன. அதன்படி, தீபாவளி சமயத்தில் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு தமிழக அரசால் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சுமார் 16 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.மாநில அரசின் மற்ற துறைகளுக்கும், பிற மாநகராட்சி ஊழியர்களுக்கும் தீபாவளிக்கு முன்னரே இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால், திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களில் ஸ்ரீரங்கம் மற்றும்
அரியமங்கலம் ஆகியவற்றை தவிர்த்து மீதியுள்ள 3 மண்டலங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த அகவிலைப்படி கைக்கு கிடைக்கவில்லை. இந்த அகவிலைப்படி உயர்வுக்கு மாநில நகராட்சித்துறை ஆணையர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால், இதற்கான ஆணை திருச்சி மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு செல்லாமல் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது. தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், செயற்பொறியாளர்கள், பிரிவு அலுவலர்கள் என மொத்தமாக சுமார் 1000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேஷன் கமிஷனரின் கையெழுத்திற்கு பிறகே அகவிலைப்படி உயர்வு அக்கவுண்ட் செக் க்ஷனுக்கு சென்று அதன்பிறகு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, நேர்மையும் துடிப்பும் மிக்க இளம் வயது திருச்சி மாநகராட்சி ஆணையரான என்.பொன்மணி ஐ.ஏ.எஸ் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்