Rock Fort Times
Online News

சென்னை விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தஞ்சை வாலிபர் கைது…!

சென்னை பெரும்பாக்கத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தினர் விமான நிலைய அதிகாரிகளுக்கும், சைபர் கிரைம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையத்திற்குள் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது, வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் திருவையாறு சென்று பிரசன்னா (27) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை பெரம்பூரில் வசித்தபோது அருகில் உள்ள வீட்டில் வசித்த குடும்பத்தினருக்கும், பிரசன்னாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களை பழிவாங்கும் விதமாக இணையதளத்தை பயன்படுத்தி இந்த வெடிகுண்டு மிரட்டலை அவர் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன், இன்டர்நெட் மோடம், ரவுட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரசன்னா, விசாரணைக்குப் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்