Rock Fort Times
Online News

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ. 15 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் முழுமையாக மீட்பு…!

தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

மதுரை பைபாஸ் சாலையில் பழங்காநத்தம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் புதிதாகத் திறக்கப்பட்ட நான்கு தளங்களைக் கொண்ட தனிஷ்க் நகைக்கடையில், நவம்பர் 12-ம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத முகக்கவசம் அணிந்த நபர் ஒருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார். கட்டடத்தில் லிப்ட் அமைக்கும் பணிக்காக விடப்பட்டிருந்த திறந்தவெளிப் பகுதி வழியாகக் கயிற்றைக் கட்டி உள்ளே இறங்கிய அவர், முதல் தளத்தில் இருந்த கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றார். இந்தத் துணிகரக் கொள்ளை தொடர்பாக மதுரை மாநகர போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையின் அடிப்படையில் யூடியூபரான நிஷாந்தின் காதலி மீனாட்சி (22), நிஷாந்தின் தந்தை சுரேஷ் (53) ஆகிய இருவரையும் நவம்பர் 14-ம் தேதி போலீசார் கைது செய்தனர். மீனாட்சி அளித்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ நகைகளை போலீசார் முதற்கட்டமாக மீட்டனர். தலைமறைவாக இருந்த நிஷாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை மதுரைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகளை மதுரை விளாச்சேரி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். நிஷாந்த் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த தனிப்படை போலீசார் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. அவற்றை நகைக்கடை நிர்வாகிகள் முன்னிலையில் எடைபோட்டு, அவற்றின் அளவு மற்றும் மதிப்பை போலீசார் உறுதிப்படுத்தினர்.

டிச. 1 வரை நீதிமன்றக் காவல் :

இந்த நிலையில், நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், மதுரை மாவட்ட 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, நிஷாந்தை டிச. 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்