Rock Fort Times
Online News

இன்று போய் நாளை வா… சம்மனுக்கு ஆஜராக வந்தவர் அலைக்கழிப்பு… * துணை சபாநாயகருக்கு ஆதரவாக செயல்படும் திருச்சி மாவட்ட காவல்துறை..!

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் எம்.ரவிசங்கர். கடந்த சில தினங்களுக்கு முன்பு துறையூரை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் ரவிசங்கரை சந்தித்து கோரிக்கை அளிக்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கார்த்திக்கை ஒருமையில் திட்டி மிரட்டியதோடு, துணை சபாநாயகரான ரவி சங்கர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினார். இது இந்திய அளவில் ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்நிலையில் துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் புகார் மனு அளித்தார். இதையடுத்து கார்த்திக்கை இன்று (நவம்பர் -16) விசாரணைக்கு ஆஜராகும்படி ஏ.டி.எஸ்.பி மதியழகன் சம்மன் அனுப்பி இருந்தார். அதன்படி, இன்று காலை விசாரணைக்கு ஆஜராக தனது வழக்கறிஞர் பொன். முருகேசனுடன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு கார்த்திக் குமார் வந்துள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரி இல்லை எனக்கூறி சம்மனுக்கு ஆஜராக வந்த கார்த்திக்கை திருச்சி மாவட்ட காவல்துறை அலைக்கழித்துள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கார்த்திக் தரப்பு வழக்கறிஞரான பொன்.முருகேசனிடம் பேசினோம். அப்போது அவர் தெரிவித்ததாவது.,

இந்திய அரசமைப்பு விதிப்படி சட்டம் எல்லோருக்கும் சமமானது. நீதி வழங்குவதில் ஏற்ற தாழ்வோ ஒருதலை பட்சமோ காட்டக்கூடாது. ஆனால், திருச்சி மாவட்ட காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. தனது கோரிக்கை குறித்து பேசுவதற்காக துணை சபாநாயகர் ரவி சங்கரை நேரில் சந்திக்க கார்த்திக் சென்றுள்ளார். ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாத துணை சபாநாயகர் அவரை அடித்து மிரட்டியுள்ளார். அதோடு விடாமல் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் துணையுடன் தாக்குதலுக்குள்ளான நபரை மிரட்டி, தனக்கு ஆதரவாக பேசி அதை வீடியோவாக எடுத்துள்ளார். இதனை விசாரித்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை அடிபணிந்துள்ளது. துணை சபாநாயகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சி நடுங்குகிறது. துணை சபாநாயகர் தாக்குதல் குறித்து விசாரிக்க மாவட்ட ஏ.டி.எஸ்.பியான மதியழகன் தான் நவம்பர் -16ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகும் படி எனது கட்சிக்காரருக்கு சம்மன் அனுப்பி இருந்தார்.
அதன்படி இன்று காலை 9.45 மணிக்கு திருச்சி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக என்னுடன் கார்த்திக் வந்தார். ஆனால், மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஏ.டி.எஸ்.பி மதியழகன் அலுவலகத்தில் இல்லை. இவரது வருகைக்காக 11 மணி வரை காத்திருந்தோம். அதன்பிறகு சோமரசம்பேட்டை அருகேயுள்ள போதாவூரில் கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும்,அதை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.போதாவூர் கொலை வழக்கு குறித்து விசாரிக்க சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கும் போது ஏ.டி.எஸ்.பி ஏன் செல்ல வேண்டும்?. அப்படியே அவசியம் ஏற்பட்டால் கூட எங்கள் சம்மன் மீது விசாரணையை முடித்துவிட்டு செல்ல வேண்டியது தானே?.நடந்த சம்பவத்தை நீர்த்துபோக செய்யவும், எங்களை அலைக்கழித்து பொழுதை வீணடிக்கவும் திருச்சி மாவட்ட காவல்துறை நினைக்கிறது. இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோக செயல். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில சட்டம்- ஒழுங்கு கூட்டத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ள திருச்சி மாவட்ட போலீஸ் இப்போதும் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. எனவே, திருச்சி மாவட்ட காவல்துறையின் ஒருதலைபட்ச செயலுக்கு எதிராக நாங்கள் ஐகோர்ட்டில் மனு கொடுத்துள்ளோம்.விரைவில் உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலுடன்துணை சபாநாயகர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்