மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில், ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் என அவரது மனைவி கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் ரத்த காயங்கள், கழுத்து இறுக்கப்பட்டது, இதயம், மூளை, நுரையீரலில் வீக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இன்று மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இதனிடையே சிபிசிஐடி போலீசார், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் மரணமடைந்ததால் இதனை ‘காவல் மரணம்’ என்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வழக்குப்பதிவில் வேறு யாருடைய பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Comments are closed.