தமிழ்நாடு அரசின் 2026–2027ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை குறித்து
கருத்து கூறிய அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சரு மான எடப்பாடி பழனிசாமி, ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களான நிலையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தவெக வாக்குறுதிகள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய பட்ஜெட் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. “மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள சூழலில், அதை எவ்வாறு சரிசெய்யப் போகிறார்கள்? அதற்கு அரசிடம் என்ன தெளிவான திட்டம் உள்ளது? என்பதை விளக்குவதற்கு இந்த அரசுத் தவறிவிட்டது. மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு போலி பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது. தவெக ஆட்சி அமைந்த இந்த குறுகிய காலத்தில் ரூ.20,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் . தாலிக்கு தங்கம், விலையில்லா கறவை மாடுகள் போன்ற திட்டங்கள் அதிமுகவின் திட்டங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின்,
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த பட்ஜெட் “மிகப்பெரிய பூஜ்ஜியம்”. தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றப் போகிறார்கள் என்பதற்கான கால அட்டவணையோ, ரோடு மேப்போ இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி மீண்டும் அறிவித்துள்ளனர். ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டமும் தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படாமல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு சோலை, கலைஞர் கனவு இல்லம், மடிக்கணினி திட்டம், முதல்வர் படைப்பகங்கள், மாடல் பள்ளிகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு வெற்றி வீடு, வெற்றி மடிக்கணினி, டிஜிட்டல் நூலகம் போன்ற புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.பெயர் மாற்றத்தைத் தவிர புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில், பட்ஜெட்டில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலம் என நிதியமைச்சர் குறிப்பிட்டது, திராவிட மாடல் அரசின் சாதனைகளை தற்போதைய அரசு ஒப்புக்கொண்டதற்கான சான்று என்றும், அதற்காக முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
பிரேமலதா விஜயகாந்த்,
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், “பட்ஜெட் செயல் வடிவம் பெற வேண்டும். அறிவிப்புகள் வெறும் சொல்லாக இல்லாமல் செயலாக இருக்க வேண்டும். வேளாண் கடன்கள் முழுமையாக ரத்து செய்யவில்லை. தமிழகத்தின் நீர் பாதுகாப்புக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு இல்லை. 10 லட்சம் கோடி கடனில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். தமிழகத்தின் கடனை குறைப்பதற்கு எந்த திட்டமும் இல்லாதது வருத்தமளிக்கிறது. சோலார், மின் பேருந்துகள் அறிவிப்புகள் வரவேற்கதக்கவை. புதிய தொழிற்சாலைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, மின் கட்டண உயர்வுதான் இருக்கிறது” என்றார்.

Comments are closed.