திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் தாலுகா அலுவலகம் எதிரே திருச்சி மாவட்ட வரவேற்பு தாசில்தார் ஷேக்முஜிப்க்கு ஒதுக்கப்பட்ட ஜீப்பை அதன் டிரைவர் புஷ்பராஜ் என்பவர் தனது இல்லமான நாகமங்கலத்தில் இருந்து திருச்சி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி தவறான பாதையில் வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு கட்டையில் ஏறி, எதிர் திசையில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பல்சர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெயிண்டர் தனபால், சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பூசாரி மணி என்பவர் பலத்த காயங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தார். இந்த விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தனபால் உயிரிழந்தார். தாசில்தார் ஜீப்பை ஓட்டிய டிரைவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை பொதுமக்கள் பிடித்து மணிகண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாகும். அவ்வாறு இருக்க தாசில்தார் ஜீப்பை அதன் டிரைவர் எப்படி எடுத்து வந்தார்?, சொந்த உபயோகத்திற்காக எடுத்து வந்தாரா?, மது போதையில் இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.