டி20 உலகக் கோப்பை பைனல்: கோப்பையை தட்டி தூக்குமா இந்தியா – தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மல்லுக்கட்டு…!
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்து வருகின்றன. லீக் மற்றும் சூப்பர் 8 போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதியை எட்டின.
இதன் முதலாவது அரை இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவும் சந்தித்தன. இதில் ஆப்கானிஸ்தானை, தென்னாபிரிக்கா எளிதில் வென்றது. 2- வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா சாய்த்தது. இன்று(29-06-2024) இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்த தொடர் முழுவதும் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் வெற்றிவாகை சூடி இருக்கின்றன. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. விராட்கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் பாமில் இருப்பது இந்திய அணிக்கு பலமாகும். விராட்கோலியும் விஸ்வரூபம் எடுத்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். தென்னாப்பிரிக்கா அணிலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டி உள்ளது. இதனால், அந்த அணி கோப்பையை வெல்ல துடிக்கும். இந்திய அணியை பொறுத்தவரை ஏற்கனவே 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கடந்த 2007 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்ல இந்தியாவும் முனைப்பு காட்டும். இதனால் , இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி பார்படாஸ் கென்சிங் டன் ஓவல் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை இந்தியா இறுதிப் போட்டி வரை முன்னேறி கோட்டை விட்டது. இந்த முறையாவது இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவாக உள்ளது.
Comments are closed.