Rock Fort Times
Online News

விண்ணில் பறக்க வேண்டும் என்ற தனது சிறு வயது ஆசையை நனவாக்கிய சுனிதா வில்லியம்ஸ்…!

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62) இன்று( மார்ச் 19) அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்த ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் நனவானது. அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை முடித்த அவர் புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் நாசா அழைத்துக் கொண்டது. அங்கு பல்வேறு தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்ட அவர்கள் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தனர். அங்கு அவர்கள் 8 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கியதால் எப்போது பூமிக்கு திரும்புவர் என்ற கேள்வி எழுந்தது.  பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்அவர்களை பூமிக்கு அழைத்து வர முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நிறுவனத்தின் ‘பால்கன் — 9’ ராக்கெட் உடன், ‘டிராகன்’ எனப்படும் வீரர்கள் பயணிக்கும் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சமீபத்தில் சென்றடைந்தது. இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நேற்று புறப்பட்டனர். இந்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா அருகே கடலில் தரையிறங்கியது. கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் நாசா விஞ்ஞானிகள் மற்றும் உலக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார். விண்ணில் பறக்கணும் என்ற தனது சிறுவயது ஆசையை அவர் நனவாக்கியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்