சென்னை, கோவையை போன்று திருச்சியிலும் நாளை முதல் ‘ஹேப்பி ட்ரீட்ஸ்’ என்ற பெயரில் ‘சண்டே கொண்டாட்டம்’ நடக்கிறது. வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அவற்றை குறைத்து புத்துணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அண்மை காலமாக தமிழக காவல்துறை சார்பில் மன மகிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து தற்போது திருச்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ என்ற பெயரில் கோர்ட் அருகே உள்ள சாலையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. திருச்சி மாநகர காவல்துறை மற்றும் “யங்க் இண்டின்ஸ் ‘ என்ற தனியார் நிறுவனம் சார்பில் பொதுமக்களிடையே நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் பங்கேற்கலாம். இதில், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சிகள், செல்லப் பிராணிகள் கண்காட்சி, ஆடல்- பாடல்கள், உடல் பரிசோதனைகள், காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி, “பேண்ட்’ வாத்தியக்குழு, காவல்துறை துப்பறியும் மோப்ப நாய் படை கண்காட்சி, உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. எனவே, திருச்சி மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து மகிழ்வுடன் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். மேலும் நிகழ்வின்போது, பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதை பொருள் பழக்கங்களிலிருந்து தற்காத்து கொள்ளும் விதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேற்கண்ட தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் எம். சத்தியபிரியா தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.