திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் வலு தூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிப்பு- கலெக்டர் அலுவலகத்தில் மனு…!
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களை, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு அளித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனுமதி கேட்டோம். அதற்கான தேதி முடிந்து விட்டதாக கூறுகின்றனர். இறுதி தேதிக்கான முன்னறிவிப்புகள் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 2 வருடமாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு உள்ளோம். எங்களையும் போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Comments are closed.