Rock Fort Times
Online News

ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சத்தை இழந்த பட்டதாரி தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற போது சிக்கினார்…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் லெனின் (30). இவர் எம்பிஏ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அங்கு வழங்கப்பட்ட சம்பளம் போதாததால் வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவர் ஆன்லைனில் பணம் செலுத்தி ரம்மி விளையாடியுள்ளார்.அதில் சுமார் ரூ.5 லட்சம் வரை இழந்துள்ளார். ஏற்கனவே வேலையை இழந்த அவர், ஆன்லைனில் 5 லட்சத்தை இழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிட்டார். இதற்காக வங்கியில் கொள்ளை அடிப்பது எப்படி என டியூபில் பார்த்து அதன்மூலம் உபகரணங்களை வாங்கினார். பின்னர் சம்பவத்தன்று இரவு உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து பணம், நகைகளை கொள்ளை அடிக்க பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக எஸ்எஸ்ஐ சாந்தி மற்றும் காவலர் அன்புகுமார் ஆகியோர் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் லெனின் நிதி நிறுவனத்திலிருந்து ஓடி இருட்டில் மறைந்து கொண்டார்.
உடனே போலீசார் ரோந்து வாகனத்தை நிறுத்தி பார்த்தனர். அப்போது அந்த நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. அப்போது இருட்டில் பதுங்கி இருந்த லெனினை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பேரில்
அவரை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சத்தை இழந்ததால் அந்த பணத்தை திருப்பி செலுத்த கொள்ளையடிக்க முயற்சி செய்ததை தெரிவித்தார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்