தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மாலை தனது வீட்டில் இருந்து அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் காணாமல் போனார். அந்தப் பெண் காணாமல் போன அடுத்த நாள் மார்ச் 11ம் தேதி காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
மாணவியின் இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா மார்ச் 12ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்.பி மற்றும் ஏ.டி.எஸ்பிகள், டிஎஸ்பிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் சம்பவம் நடைபெற்று 5 நாட்களாக எந்தவித துப்பும் கிடைக்காமல் திணறி வந்தனர். இந்நிலையில் காற்றாலை கோபுர சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீசார் மார்ச் 19ம் தேதி தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். குளத்தூர் காவல் நிலையத்தில் தர்ம முனீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து, மார்ச் 20ம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்த வழக்கானது, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் விரைந்து செயல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 21ம் தேதி அனைத்து விசாரணை நடைமுறைகளும் முறைப்படி நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று (மே 25) தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்றவர்,
கடந்த 2020-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் பாப்பா (65) என்ற மூதாட்டியிடம் நகைகளை திருடி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த தர்ம முனீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கடந்த ஆண்டு தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அவருக்கு கடந்த ஆண்டு டிச.18-ல் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர்.24-ம் தேதியில் இருந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்காக அவர் சாயல்குடியில் இருந்து வேடநத்தம் வழியாக குறுக்குச் சாலை வழியாகவே தூத்துக்குடி வந்து சென்றபோதுதான், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
…

Comments are closed.