Rock Fort Times
Online News

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு காரணம் என்ன?

2026 சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்தார், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி ஒவ்வொரு தொகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கூட்டமும் ஓரளவுக்கு நன்றாகத் தான் இருந்தது. ஆனால், விஜயின் வருகை, இளைஞர்கள், இளம்பெண்களின் எழுச்சி போன்றவற்றால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக 47 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 74 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காமல் விஜய் தடுமாறியபோது விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ‘காய்’ நகர்த்தினார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். இங்கேதான் ஆரம்பித்தது பிரச்சனை. யாரை எதிர்த்து எம்ஜிஆர், அஇஅதிமுக என்ற கட்சியை தொடங்கினாரோ அந்தக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று
சிவி சண்முகம், வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அதோடு, தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவளித்து வாக்களித்தனர்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி, விஜய்க்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. அதோடு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்களையும் தூக்கி அடித்தார். இதனால்,
அதிமுகவில் இரண்டு அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன. இந்தநிலையில் வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய 3 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

காரணம் என்ன?

அவர்கள் ராஜினாமா செய்ததற்கு எடப்பாடி பழனிச் சாமியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என்பதாலும், அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் வருங்காலத்தில் அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்காது என்பதாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் தங்களது பதவியை ராஜினாமா செய்த விட்டு அந்த கட்சியில் இணைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?” என மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேலின் கணவர் குமரவேல் கூறுகையில், கட்சியின் பிளவு ஏற்பட்டுவிட்டதுதான் காரணமாக உள்ளது. அ.தி.மு.கவில் இரண்டு பக்கமும் பிரச்சனை நடந்து வருகிறது. தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதால் த.வெ.க. பக்கம் சென்றால் தான் தீர்வு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக முன்னாள் அமைச்சர் செம்மலை ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்