திருச்சியில் மாணவர் படுகொலை : சவ ஊர்வலத்தில் ரகளை…(வீடியோ இணைப்பு)
போலீசார் எச்சரித்து அனுப்பினர்...
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா கொடியாலம் மேலத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல மாணவர் கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் கதவுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்து படுகொலை செய்தனர். ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கோகுல் மீது அடிதடி வழக்கு உள்ளது தெரிய வந்தது. பின்னர், பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள், வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சவ ஊர்வலம் ஜீயபுரம் கடைவீதி அருகே வந்தபோது சில இளைஞர்கள் ரகளை செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஜீயபுரம் கடைவீதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.