ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்பது அரைவேக்காட்டுத்தனமானது…* அமைச்சர் நிர்மல்குமார்…!
சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மின் வாரியத்தில் 2013-ம் ஆண்டுதான் நீண்டகால ஒப்பந்தம் எல்லாம் போடப்பட்டது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு நீண்டகால ஒப்பந்தத்தை தொடங்கவுள்ளோம். 3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் என அறிவித்திருந்தாலும் 1,000 மெகாவாட் அளவுக்குத்தான் கொள்முதல் செய்யவுள்ளோம். நாளை முதல் 31-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். ஒரு யூனிட் தெர்மல் மின்சாரம் ரூ.17 முதல் ரூ. 18க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் பவர் உற்பத்திச் செலவு ரூ. 30. கேஸ் பவர் கொள்முதல் செய்வதன் மூலம் ரூ.5 முதல் 7 கோடி கூடுதல் செலவு ஏற்படும். தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் மின் வெட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நமது சொந்த உற்பத்தி 5.300 மெகாவாட் தான். தேவையான மீதி மின்சாரத்தை வெளியில் இருந்து தான் வாங்குகிறோம். செப்டம்பரில் மின் தேவை அதிகமாக இருந்ததால் நிலையங்களை சீரமைக்க முடியவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் ரூ.30-க்கும் அதிகமாகத்தான் கொள்முதல் செய்கின்றன. மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் ஊழல் செய்ய வழிவகையில்லை. உப்பூரில் மின் உற்பத்தி செய்ய ரூ.6,000 கோடி முதலீடு செய்த தி.மு.க. அதனை செயல்படுத்தவில்லை. உடன்குடி அனல் மின் நிலைய உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 660 மெகாவாட்டுக்கு பதில் 800 மெகாவாட் திறனில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்பது அரைவேக்காட்டுத்தனமானது. 45,000 மின்மாற்றிகள் 25 ஆண்டுகள் பழமையானதாக உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத ஒன்று. மின் தேவை குறித்து தேசிய அளவில் சரியாக மதிப்பிடவில்லை. மின் தேவையை சரியாக மதிப்பிடாதது தான் அவசர கொள்முதலுக்கு காரணம். பொய்யான குற்றச்சாட்டுகளை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.