திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை இருந்த இடத்திலிருந்தே தெரிவிக்கும் வகையில் ‘மணவை எம்எல்ஏ.டாட்காம்’ மற்றும் நம்ம நம்மகதிரவன்.ஓஆர்ஜி என்ற இரண்டு பிரத்தியேக இணையதளங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கான துவக்க நிகழ்ச்சி இன்று ( அக்டோபர் 14) நடைபெற்றது. இதில் மணப்பாறை தொகுதி தமிழக வெற்றிக்கழக
சட்டமன்ற உறுப்பினர் ஆர். கதிரவன் கலந்து கொண்டு, இணையதளத்தையும், புகார் தெரிவிப்பதற்காக சிறப்பு செல்போன் எண்ணையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசும்போது., நமது மணப்பாறை சட்டமன்ற தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. ஆகவே, பொதுமக்கள் கோரிக்கையை உடனுக்குடன் தீர்க்கும் வகையிலும், எனது நேரடி கட்டுப்பாட்டில் வரும் வகையிலும் இந்த இரண்டு இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, வடிகால், மின்சாரம், போக்குவரத்து
உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் தொடர்பான உள்ளூர் பிரச்சனைகளை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். பிரச்சனையுள்ள இடம், பாதிப்பு விவரங்கள், எதிர்பார்க்கப்படும் தீர்வு மற்றும் தேவையான புகைப்படங்களை இணைத்து மனுவாக நீங்கள் டிஜிட்டல் முறையில் இதில் சமர்ப்பிக்க முடியும். இந்த மனு சமர்ப்பித்த பின்னர் கிடைக்கும் குறிப்பு எண்ணை பயன்படுத்தி அதன் நிலையை அறிந்து கொள்ளும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் பெற தேவையான தகுதிகள், அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை குறித்து அறிந்து கொள்வதற்கான முறைகளும் நமது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை செல்போன், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற எதில் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஆகவே இது நமது மணப்பாறை தொகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவித்தார்.

Comments are closed.