திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாலையோரம் மீன் விற்றவர் மீது கான்கிரீட் கலவை எந்திரம் மோதியதில் பெண் பலி – மற்றொருவர் படுகாயம்…!
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமம், மீனவர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி செல்வராணி (47). கணவன், மனைவி இருவரும் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொட்டியத்தில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சாலை ஓரமாக மீன்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த சாலை வழியாக லோடு ஆட்டோவின் பின்புறம் கான்கிரீட் கலவை தயார் செய்யும் இரண்டு இயந்திரத்தை வாகனத்தின் பின்னால் கட்டி சென்று கொண்டிருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு கலவை இயந்திரம் மட்டும் கழன்று சாலை ஓரமாக மீன் விற்றுக் கொண்டிருந்த செல்வராணி மற்றும் மீன் வாங்க நின்று கொண்டிருந்த தொட்டியம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மணிவேல் (55) ஆகியோர் மீது மோதிஉள்ளது. இதில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செல்வராணி உயிரிழந்தார். மேலும் மணிவேல் லேசான காயங்களுடன் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து உயிரிழந்த செல்வ ராணியின் உடலை தொட்டியம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கலவை இயந்திரம் வண்டியில் இருந்து கழன்று மீன் விற்றுக் கொண்டிருந்த பெண் மீது மோதிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.