திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவருக்கான் சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம் , நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி இருந்தது, ஆயுத கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் என்பவர் இன்று(22-07-2024) தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து தப்பியோடி விட்டார். இலங்கையைச் சேர்ந்த இவர் மீது சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2019 ம் ஆண்டு பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் (55) என்பவர், ஆன்-லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய அவரை இது வரை கண்டுபிடிக்காத நிலையில் மேலும் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் திருச்சி சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.