தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் முதன்மையானது, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா திருத்தலம். இங்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, மும்பை, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதாவை தரிசித்துச் செல்கின்றனர். இந்த ஆலயத்திற்கு பஸ்கள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் பக்தர்கள் வருகை தருகின்றனர். நடைபயணமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது உண்டு. இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நலன்கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
“வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி மும்பையிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் லோகமான்ய திலக் டெர்மினஸ் – வேளாங்கண்ணி விழா கால சிறப்பு ரயிலானது (01161), அடுத்த மூன்றாம் நாள் வேளாங்கண்ணிக்கு இரவு 8.35-க்கு வந்து சேரும். மறுமார்க்கமாக, வரும் 28-ம் தேதி வேளாங்கண்ணியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வேளாங்கண்ணி – லோகமான்ய திலக் டெர்மினஸ் விழாக் கால சிறப்பு ரயிலானது (01162) அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு லோகமான்ய திலக் டெர்மினஸை சென்றடையும்.
இதேபோல, வரும் செப்டம்பர் 6-ம் தேதி லோகமான்ய திலக் டெர்மினிஸிலிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் லோகமான்ய திலக் டெர்மினஸ் விழாக்கால சிறப்பு ரயிலானது (01163) அடுத்த மூன்றாம் நாள் வேளாங்கண்ணிக்கு நள்ளிரவு 12.30-க்கு வந்து சேரும். மறுமார்க்கமாக வரும் செப்டம்பர் 8-ம் தேதி வேளாங்கண்ணியிலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வேளாங்கண்ணி – லோகமான்ய திலக் டெர்மினஸ் விழாக் கால சிறப்பு ரயிலானது (01164), மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு லோகமான்ய திலக் டெர்மினஸை சென்றடையும்.
இந்த ரயில்களானது, லோகமான்ய திலக் டெர்மினஸிலிருந்து புறப்பட்டு தானே, கல்யாண், லோனாவாலா, புனே, டான்ட், சோலாப்பூர், கலபுர்கி, வாடி, ராய்ச்சூர், மந்த்ராலயம் சாலை, குண்டக்கல், தாடிபத்ரி, கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து சேரும். இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.