விடுபட்டவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க சிறப்பு முகாமா? -திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு…!
தமிழ்நாடு அரசு சார்பில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில், விடுபட்டவர்களுக்கு மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்றைய தினம்(17-08-2024) அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்த பல பெண்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குவிந்தனர். அதேபோல, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பெண்கள் திரண்டனர். அப்போது பணியில் இருந்த அலுவலர்கள்
இந்த தகவல் முற்றிலும் வதந்தி. அப்படி ஒரு முகாம் நடத்தப்படவில்லை. அரசு முறையாக அறிவிக்கும் போது தங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்
என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுபோன்ற பொய்யான தகவல்களை வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. தவறான தகவலை உண்மை என்று நம்பி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதனைப் படித்துப் பார்த்த பல பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Comments are closed.