திருச்சியில் ரூ.50 லட்சம் கொள்ளை வழக்கில் ஐந்து பேர் கைது – போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் மூன்று பேருக்கு காலில் எலும்பு முறிவு…!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ரமணி. இவர் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான லாரி மூலம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள மார்க்கெட்டிற்கு நாள்தோறும் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 3ம் தேதி வழக்கம்போல காய்கறிகளை தனக்கு சொந்தமான லாரியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அனுப்பி உள்ளார். லாரியை டிரைவர் ஆனந்த் ஓட்டினார். அவருடன் ரமணியிடம் பணியாற்றும் கணக்காளர் லோகேஸ்வரன் என்பவரும் உடன் சென்று இருந்தார். கும்பகோணத்தில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசூல் ஆன ரூ.50 லட்சம் பணத்துடன் லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை பெட்டவாய்த்தலை அருகே உள்ள காவல்காரன் பாளையம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். அப்போது காரில் வந்த முகமூடி அணிந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் லாரியில் உள்ள லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து லாரி டிரைவர் ஆனந்த் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர் பெட்டவாய்த்தலை போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் கொள்ளையர்கள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன் குமார்(25), போஸ் (எ) இசக்கிமுத்து(25), திருநெல்வேலியை சேர்ந்த வெள்ளை பாண்டி(22), முத்து மணிகண்டன்(25), மதுரையை சேர்ந்த சூர்யா (எ) உதயநிதி (27) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அப்போது போலீசாரிடமிருந்து இசக்கிமுத்து, வெள்ளை பாண்டி, சூர்யா ஆகிய மூவரும் தப்ப முயன்றுள்ளனர். அப்பொழுது கீழே விழுந்ததில் மூவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மூவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாரியில் கொள்ளையடித்த பணத்தில் ரூ.26 லட்சத்தை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments are closed.