திருச்சி மாவட்டம் அயன்புதுப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிச்சை. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகள்கள் வித்யா ( வயது 21), காயத்திரி (20). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தங்கி அங்குள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகள் இருவரும் ஊருக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த தாய், மகள்கள் இருவரிடமும் விசாரித்துள்ளார். அப்போது காங்கேயத்தை சேர்ந்த ஒரு வாலிபரை வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரை காயத்திரியும் காதலித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த சகோதரிகள் எங்கே நமது காதல் கை கூடாமல் போய்விடுமோ? என்ற பயத்தில் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்காள்-தங்கை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது செல்போன்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.