தஞ்சாவூர் மாவட்டம், ராயன்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர், தனது நண்பர்கள் 7 பேருடன் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் நாமக்கல்லில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். விழா முடிந்து இன்று பிற்பகல் 4 மணியளவில் துறையூர் வழியாக அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் முசிறி, ஜம்புநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது, இடதுபுறமாக சென்ற வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக பாய்ந்து, சாலையோரமிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Comments are closed.