Rock Fort Times
Online News

இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்…!

பிரபல தமிழ் சினிமா பாடகர் கிருஷ்ணராஜ் இன்று(22-10-2026) காலமானார். அவருக்கு வயது 75. தமிழ் திரையுலகில் தனக்கென தனி இசை அடையாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் தேவா. இவரது இசையில் உருவான பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. அந்தப் பாடல்களில் தனது குரலால் தனி முத்திரை பதித்தவர்களில் கிருஷ்ணராஜும் ஒருவர். தேவா இசையமைத்த ‘அதிகாலை சுபவேளை’ திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ், தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்பைப் பெற்றார். தனது தனித்துவமான குரல் வளத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கிருஷ்ணராஜ் பாடிய பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவற்றில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் மிகவும் முக்கியமானது. இந்தப் பாடல் அவரது திரையிசைப் பயணத்தில் தனித்துவமான அடையாளமாக அமைந்தது. கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற அய்யய்யோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், கழுகு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடலும் அவரது குரலில் வெளியான கவனிக்கத்தக்க பாடல்களில் ஒன்றாகும். கிருஷ்ணராஜ் உடல்நலக் குறைவால் காலமான நிலையில், அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இசையமைப்பாளர் தேவா மறைந்த நிலையில், அவருடன் பல பாடல்களில் இணைந்து பணியாற்றிய கிருஷ்ணராஜும் உயிரிழந்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்