திருச்சி மாவட்டம், துறையூர் நந்திகேஸ்வரர் ஆலய கோசாலை ஆக்கிரமிப்பு… * துணை சபாநாயகர் மு. ரவிசங்கர் அதிரடி ஆக்ஷன்…
திருச்சி மாவட்டம், துறையூர், பாலக்கரை பகுதியிலுள்ளது, நந்திகேஸ்வரர் ஆலயம்.17ம்நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் இவ்வூரை ஆட்சி செய்த ஜமீன்தார் பொருளுதவியுடன் கட்டப்பட்டது இத்திருத்தலம். இங்கு சம்பத் கௌரி, முருகன், விநாயகர், ஐயப்பன் மற்றும் நாக கன்னி ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு வந்து சிவனை மனமுருகி வணங்கி வழிபட்டால் நினைத்தது நடக்கும், வாழ்வில் துன்பங்கள் அகலும் என நம்பப்படுகிறது. இதனால் துறையூர் மட்டுமின்றி, அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் இக்கோவிலுக்கு வருகைதருவது வழக்கம். இப்படி பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்த துறையூர் நந்திகேஸ்வரர் ஆலயம், கடந்த சில ஆண்டுகளாக முறையான பலாமரிப்பு இன்றியும், கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததாகவும், கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் தனி நபர்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை வளர்ப்பதாகவும் தமிழக துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ரவிசங்கருக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. இதையடுத்து நேற்று (அக்டோபர் -21) காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நந்திகேஸ்வரர் ஆலயத்திற்கு நேரில் சென்ற ரவிசங்கர், கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்தார். அப்போது கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வாடகையை சரியாக செலுத்தாமல் கடை நடத்தி வரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை கண்டித்ததுடன், ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, நந்திகேஸ்வரர் ஆலய கோசாலையில் கோயிலுக்கு சொந்தமான 8 பசுக்கள் மட்டுமின்றி தனிநபர்களுக்கு சொந்தமான பசுக்களும் இருப்பதை கண்ட துணை சபாநாயகர் ரவிசங்கர், உடனடியாக அவற்றை கோ சாலையிலிருந்து வெளியேற்றவும்,மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் சிறப்பு கவனம் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் பழங்காலத்தில் கோவிலுக்கென தயார் செய்யப்பட்டு, தற்போது போதிய பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து கிடந்த ஆலயத்தின் திருத்தேரையும் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள், 1970க்குப் பிறகு இத்திருத்தேர் பயன்பாடில்லாமல் இருக்கிறது. ஆகவே தேரை புதுப்பிப்பதற்கும் வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து உடன் வந்திருந்த வருவாய்த்துறையினரை அழைத்த துணை சபாநாயகர், நந்திகேஸ்வரர் ஆலய ஆய்வு குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வறிக்கை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கூறினார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துறையூர் நந்திகேஸ்வரர் ஆலயத்தில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுத்த துணை சபாநாயகர் மு. ரவிசங்கரை அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.