கிரிக்கெட் போட்டியில் விளையாட விடாமல் புறக்கணிப்பதா?- திருச்சி ஈவெரா கல்லூரி மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்…!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 23ம் தேதி ( திங்கட்கிழமை) கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி அணியும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியில் தந்தை பெரியார் ஈவெரா கல்லூரி அணி விளையாட மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த கல்லூரிகள் யாருடன் மோத வேண்டும் என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்படும். ஆனால் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதை முடிவு செய்ய ஆன்லைனில் மீட்டிங் நடைபெற்றுள்ளது. அதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பெரியார் ஈவெரா கல்லூரி உடற்கல்லூரி ஆசிரியர் தாமதமாக அதில் கலந்து கொண்டுள்ளார். இதனால், பெரியார் ஈவெரா கல்லூரி கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளனர். இதேபோல திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு கல்லூரி, மணப்பாறை அரசு கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி ஆகிய ஐந்து கல்லூரிகளும் பெயர் பதிவு செய்த நிலையிலும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, திங்கட்கிழமை நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் தங்கள் கல்லூரி உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்ட ஐந்து கல்லூரிகளையும் இணைத்து போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
Comments are closed.