Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீர்…

பொதுமக்கள் கடும் அவதி...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சுமார் 800 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,168.03 கோடி மதிப்பில் 4 தொகுப்புகளாக புதைவடிகால் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் மிகவும் சுணக்கமாக நடைபெறுவதாலும், பல இடங்களில் முறையான மாற்று ஏற்பாடுகள் இல்லாததாலும், புதைவடிகால் திட்டப்பணிகளால் பொதுமக்கள் தினமும் பல்வேறு வகையான இடையூறுகளை சந்தித்து வருகின்றனா். குறிப்பாக சாலை, கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்சனை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி சாலைகளும், கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் திருச்சியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் சிறு மழைக்கே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைக்கு உட்பட்ட விமான நிலையப் பகுதிகளில் பொதுமக்கள் பல விதமான , சிரமங்களை சந்தித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி 4 -வது மண்டலம் (பொன்மலைக் கோட்டம்), விமான நிலையம், வயர்லெஸ் சாலையில், கடந்த சில தினங்களாக இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் புதை வடிகால் திட்டப்பணிகளால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் சாலையை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. அவ்வப்போது குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்படுகிறது. மேலும் நேற்று பெய்த சிறு மழைக்கே, விமான நிலையம் அருகேயுள்ள ஜேகே நகர், திருமுருகன் நகர், லூர்து நகர் பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலில், புதைவடிகால் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட மண் மற்றும் குப்பைகளால் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, சாலை மற்றும் குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. இதனையடுத்து கழிவுநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால் மாநகராட்சி நிர்வாகம், மழைக்காலம் தொடங்கும் முன்பு புதைவடிகால் திட்டப்பணிகளை முடித்து சாலைகளையும், கழிவுநீர் வாய்க்கால்களையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்