நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டு பெறும் பணி- திருச்சியில் நாளை தொடக்கம்…!
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வருகிற 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளிக்க இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் மூலம் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, திருச்சி தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்1,644 பேரும், மாற்றுத்திறனாளிகள் 609 பேரும் படிவம் 12டின்படி வண்ணப்பித்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் ஓட்டுகளை பெற திருச்சி தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் 9, திருச்சி மேற்கில் 8, திருச்சி கிழக்கில் 4, திருவெறும்பூரில் 4, கந்தர்வக்கோட்டையில் 6, புதுக்கோட்டை 4 என மொத்தம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், 4ம்தேதி முதல் (நாளை) 6ம்தேதி வரை ஓட்டுகளை பெற செல்ல உள்ளனர். வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு நேரில் செல்லும் போது வாக்காளர் இருப்பிடத்தில் இல்லையெனில் அந்த வாக்காளருக்கு 8 மற்றும் 9ம்தேதி ஆகிய இரு நாட்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். 2வது முறை வாய்ப்பு வழங்கியும் ஓட்டு செலுத்தாதவர்கள் 19ம்தேதி ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க இயலாது. குழுவினர் வருகை குறித்து முதல்நாள் செல்போன் வழியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம் அந்த வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் போது குழுவில் இடம்பெற்றுள்ள மைக்ரோ அப்சர்வர்களால் கண்காணிக்கப்படுவதோடு, வீடியோ பதிவும் செய்யப்படும். தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்ட இந்த வாக்காளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.