Rock Fort Times
Online News

செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு…!

செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று(22-08-2026) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி (OTT) தளங்களில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் மட்டுமே, அந்தப் படங்களைத் திரையிடுவோம் என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இத்தகைய நடைமுறை இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் இதனைப் புகுத்துவது ஏற்புடையதல்ல.
ஆண்டுக்கு சுமார் 250 படங்கள் வெளியாகும் சூழலில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். ஆகவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் இந்த முடிவால் சூரி நடித்துள்ள மண்டாடி, சர்தார் 2, டிமான்ட்டி காலனி 3, மீசையை முறுக்கு 2, டோரதி உள்ளிட்ட பல படங்கள் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகாது என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்