அண்ணாமலை இதற்கு பதில் சொல்லிவிட்டால் கட்சியை கலைத்து விடுகிறேன்- திருச்சி பிரச்சாரத்தில் தெறிக்கவிட்ட சீமான்…!
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும், பாஜக தலைமையில் இன்னொரு கூட்டணியும் அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில்,
நாம் தமிழர் கட்சி திருச்சி வேட்பாளர் ராஜேஷை ஆதரித்து உறையூர், திருவானைக்காவல், பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சீமான் பேசியதாவது:- நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் நோக்கத்தில் தான் ஜல்லிக்கட்டுக்கான தடை கொண்டு வரப்பட்டது. நமது பாரம்பரிய காளை இனம், நமது பாரியம்பரிய விதைகள், நமது பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துவிட்டு பெரு நிறுவனங்கள் கையில் நாட்டை பெரும் வர்த்தக சந்தையாக மாற்றிக் கொடுத்துள்ளன மத்திய, மாநில அரசுகள். அந்த சந்தையில் உள்ள மந்தைகளாக மக்கள் உள்ளனர். இந்த அழிவிலிருந்து தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும், பாரம்பரியத்தையும், இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கவே நாம் தமிழர் கட்சி அரசியலை கட்டமைத்துள்ளது.
வரி செலுத்தும் அனைவருக்கும் சமமான கல்வி, சமமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும். வெற்று வாக்குறுதிகள் அளிக்கவோ, இலவசங்கள் அளிக்கவோ வரவில்லை. மக்களிடையே நிலவும் வறுமை, அறியாமை, மறதி ஆகியவற்றை ஆதாயமாகக் கொண்டு அரசியல் நடத்தும் கட்சிகளை விரட்டவே தம்பி, தங்கைகளாக நாங்கள் வந்துள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரால் பாரம்பரிய விவசாயத்தை அழித்து விட்டனர். அதனை மீட்டெடுக்க வேண்டும்.
தமிழ் மொழி, இன வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை. ஐபிஎஸ் படித்தவர்போல பேசுவதில்லை. தமிழகத்துக்கு பாஜ ஏன் தேவை என்பதற்கான ஒரு நியாயமான காரணத்தை அண்ணாமலை கூறிவிட்டால், எங்கள் கட்சியையே கலைத்து விடுகிறோம். எங்களுக்கு ஏற்கெனவே உள்ள சின்னம் இல்லையென்றாலும் எங்கள் கட்சியின் செல்வாக்கை ஜூன் 4ம் தேதி உலகம் அறியச் செய்வோம். இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியும், பாஜ-வும் வென்றுவிடக் கூடாது. இரு கட்சிகளும் தமிழ் இனத்துக்கான விஷச் செடிகள். தமிழ் இனத்துக்கும் மட்டுமின்றி அனைத்து தேசிய இனத்துக்கும் எதிரானவை. பணமில்லா பரிமாற்றம் சாத்தியமாகிவிட்ட சூழலில், சின்னம் இல்லா தேர்தலும் சாத்தியமே. இத்தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதுமே 3 கூட்டங்களுக்கு இடையேதான் போட்டி. ஒன்று திராவிடக் கூட்டம். மற்றொன்று இந்தியக் கூட்டம். மூன்றாவது தமிழ் தேசிய இனத்தின் கூட்டம். இதில், யார் வெல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் காலம் விரைவில் வரும். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு, தாமரை சின்னத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்றார். பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.