புதுக்கோட்டையில் விவசாயியிடம் லஞ்சம் கேட்கும் பெண் சர்வேயர்…* சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!
புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் உருமையா. இவர் தனது மனைவி பெயரில் உள்ள விவசாய இடத்தை பட்டாவில் உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அணுகியுள்ளார். அப்போது, வேலையை முடிக்க லஞ்சம் தருமாறு சர்வேயர் எழில்கொடி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே எழில்கொடிக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக உருமையா கொடுத்துள்ளார். இந்நிலையில், பட்டாவில் உட்பிரிவு வேலையை முடித்து தர கூடுதலாக ரூ. 2 ஆயிரம் தருமாறு சர்வேயர் எழில்கொடி லஞ்சம் கேட்டுள்ளார். அவர் லஞ்சம் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதில், எழில்கொடி பேசி இருப்பதாவது;
சீக்கிரம் வேலை முடியாது. எவ்வளவு நாளில் வேலை முடியும் என்றும் தெரியாது. செல்போன்களை எடுத்து வைத்துவிடுங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. நமது கையை கூட நம்மால் நம்ப முடியவில்லை. நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்களோ கொடுங்கள். ரூ. 1,000 எல்லாம் போதாது… ரூ. 2,000 கொடுங்கள்… எனக்கு ஜிபே கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் ஜிபே எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம். ஜிபேயில் நான் யாருக்கு மாற்றுவது. யாரையும் நம்ப முடியவில்லை. காலம் மோசமாக உள்ளது. இவ்வாறு அதில் அவர் பேசி உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்க கூடாது என்று கண்டிப்புடன் கூறி உள்ளார். அதையும் மீறி இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சம்பந்தப்பட்ட பெண் சர்வேயர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.