திருச்சி மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் மறைந்த வி.எல்.ஸ்ரீனிவாசன், உறையூர் கலை ஆகியோரின் இரண்டாமாண்டு நினைவுநாள்… * திருச்சி, திருவெறும்பூர், மணப்பாறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி புகழ் வணக்கம்!
திருச்சி, கிழக்குத் தொகுதிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் வி.எல்.ஸ்ரீனிவாசன். வழக்கறிஞரான இவர் நடிகர் விஜயின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வந்தார். விஜய் நடிகராக இருந்தபோதே விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதனிடையே நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை ஆரம்பித்தபோதும் இளைஞர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து தீவிரமாக அரசியலும் செய்து வந்தார். அதன்படி, கட்சித் தலைமையால் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் என்கிற பொறுப்பும் தேடி வந்தது. இதனிடையே கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை த.வெ.க அறிவித்திருந்தது. இதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் 3000க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்த சீனிவாசன் மாநாடு நடைபெறும் பகுதியான விக்கிரவாண்டிக்கு தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வி.எல்.ஸ்ரீனிவாசன், உறையூர் கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இத்துயர சம்பவத்தில் பலியான திருச்சியை சேர்ந்த த.வெ.க பிரமுகர்களான இருவரின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று(27-10–2026) அனுசரிக்கப்பட்டது.
அதன்படி, திருச்சி கிழக்குத் தொகுதி த.வெ.க பொறுப்பாளர் தர்கா எஸ்.சௌகத் தலைமையிலான த.வெ.க நிர்வாகிகள் அன்னாரது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.
இதேபோல திருவெறும்பூரில் எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி தலைமையிலும், அதேபோல மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன் தலைமையிலும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆர்.கே.ராஜா, சிந்தாமணி எல்.முத்துக்குமார், ப.செந்தில்நாதன் மற்றும் திருச்சி மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, வட்ட கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed.