Rock Fort Times
Online News

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?… * அமைச்சர் பேச்சுக்கு அன்புமணி, செல்லூர் ராஜூ கண்டனம்…!

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு  சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” என்று தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் கொடுத்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“மழைக் காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகும்போது அதிகளவில் நுரை பொங்குகிறது. மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு நிறைந்த தண்ணீர் ஆற்றில் கலக்கும் போதும் நுரை ஏற்படுகிறது. அதேவேளையில், மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும்” என்று கூறினார். அவரது இந்த பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ராஜீவ் ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு தான் காரணம் எனக் கூறியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் , ஆறுகளில் நுரை பொங்குவதற்கு  சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து  ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

செல்லூர் ராஜு,

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ஷாம்பு, சோப்பால் நொய்யல் ஆற்றில் நுரை வருவதாகச் சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும். நான் எகிப்தை ‘ஈஜிபுத்’ என்று சொன்னதற்கும், ஆற்றில் தெர்மாக்கோல் போட்டதற்கும் என்னை எப்படியெல்லாமோ கிண்டல் செய்தார்கள்” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்