Rock Fort Times
Online News

அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’: தீபாவளிக்கு மறுநாள் நவ.9 விடுமுறை… அறிவித்தது தமிழ்நாடு அரசு..!

நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இப்பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு வசதியாக சிறப்பு ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில், தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, மறுநாள் (நவ.9) திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், “இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்