Rock Fort Times
Online News

திருச்சி, மன்னார்புரம் பேருந்து நிறுத்தத்தில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதி… மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

திருச்சி சிட்டி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுமார் ரூ.480 கோடி மதிப்பில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், திருச்சி அருகேயுள்ள நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களும் வேலைக்காகவும் பல்வேறு அலுவல் பணிகளுக்காகவும் தினந்தோறும் திருச்சி மாநகருக்கு வருகின்றனர். அப்படி அவர்கள் வரும்போது பஞ்சப்பூருக்கு சென்றால் தாமதமாகும் என்பதால் மன்னார்புரத்திலேயே இறங்கி இங்கிருந்து டவுன்பஸ் மூலம் ஜங்ஷன், தில்லைநகர், உறையூர் ,சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு திருச்சி எம்.பி.துரை வைகோ தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி பயணியர் நிழற்குடை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. ஆனால் பல்வேறு ஊர்களில் இருந்து பல மணி நேரம் பயணம் செய்து அடுத்த இடங்களுக்கு செல்வதற்காக இங்கு வரும் பயணிகள் பலரும் இயற்கை உபாதையை கழிப்பதற்கு மன்னார்புரம் பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிட வசதி செய்து தரப்படாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்போதைய சூழலில் பலரும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வரும் சூழலில் அவசரத்திற்கு ஒதுங்கக்கூட அருகில் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் பெண்கள் மற்றும் முதியவர்கள் படும் இன்னல்களை சொல்லி மாளாது என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கவலையுடன் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே திருச்சி மாவட்ட கலெக்டர் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் பேசி கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், அதுவரை தற்காலிகமாக “மொபைல் டாய்லெட்” வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்