Rock Fort Times
Online News

திருச்சியில் வாகனங்களுக்கு இடையே மோட்டார் சைக்கிளில் வளைந்து, நெளிந்து சென்று “அட்ரா சிட்டி” காட்டிய வாலிபருக்கு காப்பு…!( வீடியோ இணைப்பு)

இன்றைய காலகட்டத்தில் சில வாலிபர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ  விடுகின்றனர். இதில் அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றாலும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கும்,  போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட  மற்றும் மாநகர காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.  இந்நிலையில்  திருச்சி, புத்தூர் மூலக்கொல்லை தெருவை சேர்ந்த அப்துல் வாகிப் என்பவரது மகன்  சீனி ரியாஸ் (24) என்பவர்,  வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில்  அசுர வேகத்தில், கார், பேருந்துகளுக்கு இடையே வளைந்து, நெளிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி சாகசம் செய்து  அந்த வீடியோ காட்சிகளை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளார். குறிப்பாக மாணவிகள், இளம்பெண்கள் சாலையில் நடந்து செல்லும்போது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்து அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு புகார்கள் சென்றன.  இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதன் பேரில், சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட சீனி ரியாசை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் இது போல் யாரும் செய்ய கூடாது என வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்