மதுரையைச் சேர்ந்தவர் சாலமன் பாப்பையா. சிறந்த தமிழறிஞர், பேராசிரியராக பணியாற்றியவர். 1000- க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்துள்ளார். இவர், மதுரை அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவருடைய மனைவி ஜெயபாய் காலமானார் இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக சாலமன் பாப்பையா இன்று (11.09.2026) காலமானார். இவரது ஈடு இணையற்ற தமிழ் சேவையைப் போற்றி, தமிழக அரசு 2000-ல் ‘கலைமாமணி’ விருதையும், மத்திய அரசு 2021-ல் ‘பத்மஸ்ரீ’ விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது மறைவு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய்,
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின்,
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி,
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்,
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Comments are closed.