திருச்சியில் இருந்து திருப்பூர், கோவை செல்ல ரூ.550 கட்டணம்-ஆம்னி பேருந்துகளில் அடாவடி வசூல்…! ( வீடியோ இணைப்பு)
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்களது நலன் கருதி ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அங்கெல்லாம் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்தைத்தான் நாட வேண்டிய நிலை. இதனை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசு நிர்ணயித்ததை விட சகட்டுமேனிக்கு கட்டணத்தை உயர்த்தி பயணிகளிடம் அடாவடி வசூல் செய்கின்றனர். அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல நபர் ஒருவருக்கு ரூ.550 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இறுதியாக, ஆம்னி பேருந்து புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக ரூ.500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவ்வளவு பணம் இல்லை என்ற பயணிகளிடம் ரூ.200 வசூலித்துக் கொண்டு தரையில் அமர்த்தி உள்ளனர். வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற நோக்கத்தில் அவர்கள் கேட்ட கட்டணத்தை செலுத்தி பயணிகள் செல்கின்றனர். ஆம்னி பேருந்துகளை நாடி வரும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு ஏற்கனவே அறிவித்து அவர்களை கண்காணிக்க குழுவும் அமைத்துள்ளது. அந்த கண்காணிப்பு குழு திருச்சியில் என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை. இவ்வாறான அடாவடி வசூலை அவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்களா? என்றும் சில பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். பொதுவாக திருச்சியில் இருந்து கோவைக்கு அரசு பேருந்துகளில் ரூ.170-ம், திருப்பூருக்கு ரூ.140 மட்டுமே கட்டணம் ஆகும். ஆனால் ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இரவு 7 மணி ஆகிவிட்டாலே ஆம்னி பேருந்துகளை மத்திய பேருந்து நிலையம் டவுன் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் வரிசையாக மணிக்கணக்கில் நிறுத்திக் கொண்டு டிக்கெட் போடுகிறார்கள். இதனால், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏற்கனவே, திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணியால் பல்வேறு இடையூறுகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். தற்போது ஆம்னி பேருந்து டிரைவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் வரிசை கட்டி நின்று கொண்டு மற்ற பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்க இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் தற்போது எந்த ஆம்னி பேருந்துகளும் நிற்பதில்லை. அதற்குரிய டெண்டர் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த இடம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால், முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது என்னவோ உள்ளூர் பயணிகள் தான். இது விஷயத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆம்னி பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தாதவாறு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.