திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). இவர், கடந்த 12-ந்தேதி மதியம் கடையில் வசூல் ஆன ரூ.37½ லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக ஒரு பையில் வைத்துக்கொண்டு ஆட்டோவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டு இருந்தார். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜா மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த சூர்யாவை நேற்று போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.37½ லட்சத்தை ஒரு பெண் வழக்கறிஞா் உள்பட 3 வழக்கறிஞா்களிடம் கொள்ளையர்கள் கொடுத்ததாகவும், அந்த பணத்தை 3 வழக்கறிஞா்களும் கோர்ட்டு வளாக பகுதியில் வைத்து பங்கு போட்டதாகவும், அந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து பெண் வழக்கறிஞா் உள்பட 3 வழக்கறிஞா்களையும் போலீசார் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி அறிந்த திருச்சி காந்தி மார்க்கெட் மளிகை, ஆயில், வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் நேற்று( 27.09.2023 ) இரவு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் இன்றி கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது, இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.